பக்தி
பக்தி மார்க்கங்கள் மூன்று. அவை உறவு மார்க்கம், சரணாகதி மார்க்கம், ஸித்திமார்க்கம் என்பனவாகும். இந்தக் கலிகாலத்தில் இறைவனை அடைய மற்ற மார்க்கங்களைவிட சுலபமாக கடைபிடிக்கக்கூடிய மார்க்கம் ஸித்திமார்க்கமாகும்.
ஸித்திமார்க்கத்தில் பக்தி நிலைகள் மூன்று. அவை தியானம், யோகம் மற்றும் தவம் என்பனவாகும்.
“தியானம் வளர்ந்தால் யோகமாகும்.
யோகம் வளர்ந்தால் தவமாகும்.
தவம் வளர்ந்தால் இறையாகும்” என்பது அடிப்படைத்தத்துவமாகும்.
தியானம்:
பக்தியை ஐம்புலன்கள் வழியாக உணரும் நிலையே “தியானம்” ஆகும்.
சாதாரண மனிதர்களும் பக்தியில் வளரும் பொருட்டு, ஸித்தர்கள் உருவ வழிபாட்டைக் கோவில்கள் மூலம் ஏற்படுத்தி வைத்தனர். ஆகம சாஸ்திரப்படி கோவில்கள் வடிவமைக்கப்பட்டு, மனிதன் பக்தியில் வளரும் சூழ்நிலைகளை உருவாக்கினார்கள். கோவில்களில் ஐம்புலன்களால் பக்தியை உணர்ந்து இறைவனை வழிபட வழிவகைகளைச் செய்தார்கள்.
அழகிய மலர்களாலும், ஆடை-ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட திருவுருவச் சிலையைக் கண்களால் தரிசித்தும், மலர்களின் மற்றும் சந்தனம் போன்ற வாசனை திரவியங்களின் நறுமணங்களை நாசியால் நுகர்ந்தும், இறைவனைப் போற்றி வழிபடும் மந்திரங்களை வாயால் ஓதியும், மங்கள வாத்தியங்கள் ஒலியை காதால் கேட்டும், உடலில் ஏற்படும் மந்திர அதிர்வுகளையும், வெளிமனதில் உணரும் பக்தி நிலையே ‘தியானம்’ என்று அழைக்கப்படுகிறது.
யோகம்:
பக்தியை ஐம்புலன்களால் உணர்ந்தபின், புலன்கள் தன்னால் அடங்கி, ஆழ்மனதில் உணரும் பக்தி நிலையே ‘யோகம்’ என்று ஸித்திமார்க்கம் கூறுகிறது.
யோக நிலையில் நமக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பரமாத்மாவின் பாகமான ஜீவாத்மாவை உணரும் நிலையை அடைகிறோம். மேலும் ஜீவாத்மா பரமாத்மாவோடு தொடர்பு கொள்ளும் நிலையையும் யோகத்தில் அடைகிறோம்.
தவம்:
பக்தியை யோகத்தில், ஆழ்மனதில் உணரும் நிலை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்தால், பக்தியானது ஆத்மாவை எட்டும். அவ்வாறு ஆத்மாவை எட்டினால், யோகம் தவமாக மாறுகிறது.
இந்நிலையில் புலன்களைக் கடந்து, ஆழ்மனதையும் கடந்து, ஆத்மாவை அடையும் பக்தியானது ஆத்ம வளர்ச்சியை பலமடங்காகப் பெருக்கி, இறைநிலையை அடையும் பேற்றினைப் பெற்றுத் தருகிறது.
“தியானத்தால் விளைவது “திருப்தி”
யோகத்தால் விளைவது “ஸித்தி”
தவத்தால் விளைவது “முக்தி”.”
முக்தி என்பது ஈசத்துவம், மோட்சம், என்றெல்லாம் அறியப்படுகிறது.
மனிதன் பக்தி நிலைகளில் வளர்ந்து, ஆத்ம வளர்ச்சிப் பெற்று இறைவனுக்கு ஒரு கருவியாக மாற வேண்டுமென்றால், ஒரு மெய்குருவின் வழிகாட்டுதல் அவசியமாகும்.
