QUOTES
மனம் எதை நாடுகிறதோ அதை செயலாக்க ஆத்மசக்தி உதவும்
(மனம் நாடும் திண்மையைப் பொறுத்து ஆத்மசக்தி வெளிப்பட்டு உதவும், ஆகையால் மனம் நல்லவைகளையே நாட வேண்டும், உயர்வாகவே நாட வேண்டும்.)
உனக்கேற்றார்போல உலகை மாற்ற இயலாது, உலகத்திற்கேற்றார்போல் உன்னை மாற்றிக்கொள்.
(உன்னைச் சுற்றியுள்ள உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உன்னோடு பழகக்கூடியவர்கள் தான் உன்னுடைய உலகம்.)
உடலாலும் உள்ளத்தாலும் உயிராலும் உணரக்கூடியதே மெய்யான பக்தியாகும்
குருவின் உபதேசத்திலும், வேதத்திலும், பொருள், உட்பொருள், மெய்ப்பொருள் ஆகிய முப்பொருள்களும் கலந்திருக்கிறது.
(வெளி மனதால் அறியப்படுவது “பொருள்”. அதை பல கோணங்களில் சிந்திப்பதால் ஆழ்மனதில் பதிவாவது “உட்பொருள்”. நேராக ஆத்மாவில் பதிவாகும் தத்துவங்கள் “மெய்பொருள்”).
குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை.
(திருவை – இறைவனை – நமக்குள் உணரச்செய்பவர் குரு. இறைவனை உணராதவர்கள் இறைவன் அருளைப் பெற இயலாது. ஆகையால் குருவின் அருளால் இறைவனை உணர்ந்த பின் அவன் அருள் பெறுவதே முறையாகும்.)
குருவை இறைவனுக்கு மேலாக வழிபட வேண்டும்.
(குருவின் வழியாக மட்டுமே சரியான முறையில் இறைவனை உணர இயலும், ஆகையால் குரு மனிதனாக இருந்தாலும் குருவை இறைவனை விட உயர்வாகக் கருத வேண்டும்)
வேதங்களும், குருவின் வார்த்தைகளும் செயல் உள்ளவை.
(வேதங்களும், குருவின் உபதேசங்களும் இறைவனின் அடிப்படைத் தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டவைகள், ஆகையால் அவை செயலுள்ளவைகளாகும்)
எல்லாவற்றையும் கடந்து, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு நமக்குள் ஜீவாத்மாவாக இருப்பவர் தான் ‘கடவுள்’.
(வேதங்களுக்கும், எல்லா சாஸ்திரங்களுக்கும், விஞ்ஞானம், மெய்ஞானம் போன்ற எல்லா அறிவுகளுக்கும் எட்டாத; எல்லா சக்திகளையும் கடந்து நமக்குள் ஜீவாத்மாக இருப்பதால் கட+உள் = கடவுள் என்று அறியப்படுகிறார்.)
நமக்குள் இருக்கும் ஜீவாத்மா வழியாக மட்டுமே பரமாத்வாவோடு தொடர்பு கொள்ள இயலும்.
(ஜீவாத்மா அந்தப் பரமாத்மாவின் ஓர் மிகச் சிறிய பாகமாக இருப்பதால், முதலில் ஜீவாத்மாவை உணர்ந்து அதன் வழியாக பரமாத்மாவை உணர வேண்டும் என்பது பிரம்ம சூத்திரமாகும்)
இறைவன் ரூபியாகவும் இருக்கிறார், அரூபியாகவும் இருக்கிறார்.
(இறைவனுக்கென்று ஓர் தனி உருவம் இல்லாததால் “அரூபி” என்றும்; இறைவன் படைப்புகளெல்லாம் அவன் உருவமாகக் கருதப்படுவதால் இறைவன் “ரூபி” என்றும் அறியப்படுகிறான்.)
தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமை ஆனவர்கள் இறைவனுக்கு அடிமையாக இயலாது.
சைவம் மனிதனை தெய்வமாக்குகிறது, அசைவம் மனிதனை அசுரனாக்குகிறது.
(சைவம், அசைவம் என்பது சைவ உணவையும், அசைவ உணவையும் குறிப்பதாகும்).
மனதிருப்தியோடு வாழும் வாழ்க்கையே வாழ்வாங்கு வாழ்வதாகும்.
(திருப்தியோடு வாழ்வதென்பது, சுக துக்கங்களால் பாதிப்படையாத மனப் பக்குவத்தோடு வாழ்வதாகும்.)
தியானம் வளர்ந்தால் யோகமாகும், யோகம் வளர்ந்தால் தவமாகும், தவம் வளர்ந்தால் இறையாகும்.
(தொடர்ந்து ஒருவன் தியானம் செய்துக் கொண்டே வந்தால் அவன் தியானம் யோகமாக வளர்ச்சி பெறும். தொடர்ந்து யோகம் செய்துக் கொண்டே வந்தால் அவன் யோகம் தவமாக வளரும். தொடர்ந்து தவம் செய்துக் கொண்டே வந்தால் தவத்தில் வளர்ச்சி பெற்று இறைவனோடு ஒன்று கலந்து விடுவான்; அதாவது நித்தியம் பெறுவான் என்பதாகும்.)
மற்ற உயிர்களுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் தொண்டாகும்.
(இறைவனை நாம் நேர்முகமாகப் பார்த்து, பேசி, அவன் விரும்பும் தொண்டைச் செய்ய இயலாது. இறைவன் படைத்த எல்லா ஆத்மாக்களும், உயிர்களும் அவன் பாகமாக இருப்பதால், அந்த உயிர்களுக்குச் செய்யும் தொண்டு இறைவனுக்குச் செய்யும் தொண்டாகக் கருதப்படுகிறது.)
ஆத்மீகத்தையும், தர்மத்தையும் பிரிக்க இயலாது
உலகம் பிறந்தது முதல் பிரளயம் வரை இறைவனின் அடிப்படைத் தத்துவங்கள் மாறுவதே இல்லை.
அனைத்து மதங்களும் ஒரே அடிப்படைத் தத்துவங்களைத் தான் போதிக்கின்றன.
இறைவன் எந்த தத்துவத்தின் அல்லது விதிகளின் கீழ் அண்ட சராசரங்களையெல்லாம் பிறப்பித்து, காத்து, அழித்துக் கொண்டிருக்கிறானோ அதுவே அடிப்படைத் தத்துவங்களாகும்.
(அடிப்படைத் தத்துவங்கள் என்பது இறைவனின் விதி, அல்லது இயற்கை விதியேயாகும். நாகரீகங்கள் மாறலாம், வாழ்க்கை வழிமுறைகள் மாறலாம், விஞ்ஞானம் போன்று பல்வேறு அறிவுகள், கலைகள் மாறலாம், ஆனால் அடிப்படைத் தத்துவங்கள் மாறுவதில்லை.)
காரணமில்லாமல் காரியமில்லை, காரியமில்லாமல் காரணமில்லை.
நாம் செய்யும் செயலால் மற்ற உயிர்களுக்கு நன்மை விளைந்தால் அது புண்ணியம், தர்மம். மற்ற உயிர்களுக்கு தீமை விளைந்தால் அது பாவம்.
பாவம் பாவத்தைத் தூண்டும், புண்ணியம் புண்ணியத்தைத் தூண்டும்.
(மனிதனின் ஆத்மாவில் அவன் செய்த பாவங்கள் இருந்தால் அவனை மறுபடியும் பாவங்கள் செய்யத் தூண்டும். அது போலவே அவன் செய்த புண்ணியங்கள் மறுபடியும் புண்ணியங்களைச் செய்யத் தூண்டும். குருவை நாடி பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும்.)
பக்தனுக்கு வருவது சோதனை, மற்றவர்களுக்கு வருவது வேதனை.
(பக்தனுக்கு வரும் கஷ்டங்கள் அவன் செய்த பாவங்களைப் போக்கும் சோதனைகளாகும். பாவங்கள் செய்த பக்தியில்லாதவனுக்கு வரும் கஷ்டங்கள் சோதனைகள் அல்ல, பாவங்களால் ஏற்படும் வேதனைகளேயாகும்.)
தானத்தில் சிறந்தது ஆத்மீக தானம்
மந்திரங்களின் ஒலி, அதிர்வுகள் ஆத்மாவைத் தூண்டி வளர்க்கக்கூடியவை.
ஐம்புலங்களின் உணர்வு பல முறை வெளிமனதில் வந்தால், அது ஆழ்மனதிற்குள் சென்று விடும், பல முறை ஆழ்மனதிற்குள் வந்தால், அது ஆத்மாவிற்குள் சென்று விடும்.
(ஆத்மாவிற்குள் சென்றவைகள் மட்டும் தான் அடுத்தடுத்த ஜென்மங்களுக்கு தொடர்ந்து வரும்.)
மனிதன் இறைவனை அடைய அதிகபட்சம் 49 ஜென்மங்கள் தரப்படுகின்றன.
(முதலில் தரப்படும் ஏழு ஜென்மங்களில் இறைவனை அடையக்கூடிய ஆத்ம வளர்ச்சி பெற இயலும் என்பது தத்துவம். அவ்வாறு வளராத ஆத்மாக்களுக்கு புதிய சூழ்நிலையில் ஈரேழு ஜென்மங்கள் தரப்படுகிறது, அதிலும் முழுமையான வளர்ச்சி பெறாதவர்களுக்கு இறுதியாக சூழ்நிலையை மறுபடியும் மாற்றி நான்கேழு ஜென்மங்கள் தரப்படுகிறது. அதாவது மொத்தம் நாற்பத்தி ஒன்பது ஜென்மங்களில் இறைவனை அடையும் வாய்ப்பாகத் தரப்படுகிறது.)
நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப, நமக்கு அடுத்த ஜென்மத்தில் பிறந்து வளரும் சூழ்நிலைகள் உருவாகும்.
வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நித்திய அணு அநித்திய அணுவோடு சேரும் போது ஒரு உயிர் உருவாகிறது.
உடலையும் மனதையும் இணைப்பது யோகாசனம். உடல், மனம், ஆத்மா மூன்றையும் இணைப்பது யோகம்
