தீட்சை

ஸித்திமார்க்கத்தில் ஸித்தர்களும், மெய்குருமார்களும், கோன்குருமார்களும் தீட்சை அளிக்கும் தகுதி பெற்றவர்களாவார்கள்.

தீக்ஷை என்பது ஓர் வடமொழிச் சொல்லாகும். தீக்ஷை என்னும் சொல் ஆங்கிலத்தில் INITIATION என்று அழைக்கப்படுகிறது. தமிழில் தீட்சை என்றும் அழைக்கப்படுகிறது.

‘தீ’ என்பது அழித்தலையும், ‘க்ஷை’ என்பது அருள்வதையும் குறிப்பதாகும். அதாவது ஆணவம், கன்மம் (கர்மவினைகள்), மாயை போன்றவற்றை அழித்து மெஞ்ஞானத்தை அருள்வதே தீக்ஷையாகும்.

ஸர்வஶ்ரீ கோன்குருநாதர் அவர்கள், ஆத்மயோக உபதேசத்தில் உடல்பக்குவம், மனப்பக்குவம், ஆத்மபக்குவம் போன்ற பக்குவங்களை போதிக்கிறார். இங்கு ஆத்மபக்குவம் என்பது மெஞ்ஞானத்தை குறிக்கும். அவ்வாறு குருவின் உபதேசங்களை முழுமையாக பின்பற்றி பக்குவமடைந்தவர்களுக்கு நித்திய நிலை பெறுவதற்கான தீட்சை அளிப்பார். தீட்சை அளிப்பது என்பது நித்தியத்திற்கான முதல்படியாகும்.

தீட்சையின் போது கோன்குருநாதர் சீடர்களின் ஆத்மாவைத் தூண்டி ஆத்மாவில் கறையாக படிந்துள்ள பல ஜென்ம பாவங்களைத் தற்காலிகமாக விலக்கி வைத்து, தமது திருக்கரத்தால் சீடர்களின் இரு புருவங்களின் மத்தியில் சுழிமுனையில் தனது நடு விரலால் தொட்டு, சந்தனம் இட்டு, அகக்கண்ணை தூண்டி திறந்தருள்கிறார்.

மூன்று அடிப்படை ஸித்திகளான குண்டலினிஸித்தி யோகம், கபாலஸித்தி யோகம், பிரம்மஸித்தி யோகம் (பிரம்ம வித்யா) ஆகிய மூன்று ஸித்திகளையும் சீடர்களின் ஆத்மாவை தூண்டி, வெளிப்படுத்தி, தீட்சை அளித்து, ஆத்மீகத்தில் மறுபிறவி அருள்கிறார்.

தீட்சை பெற்ற சீடர்கள் அன்று முதல் “பிரம்மகுலம்” என்று அறியப்படுகிறார்கள். தீட்சை என்பது, மெய்குருவானவர் தகுதி அடைந்த ஒருவனை சீடனாக ஏற்றுக் கொள்ளும் சடங்காகும்.

சாதாரணமாக கோன்குருநாதர் எந்த ஸித்தியையும் வெளிப்படுத்துவதில்லை. ஆனால், தீட்சையின்போது தன் சீடர்களுக்கு குருவின் மகிமையை உணர்த்துவதற்காகவும், குருவின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படுத்தி, குருபக்தியை வளர்ப்பதற்காகவும், ஆத்மீகத்தில் வைராக்கியத்தோடு குருவின் உபதேசங்களை செயலாக்குவதற்காகவும், கலிகால கேடான ஆணவத்தை அழித்து, பணிவை உருவாக்குவதற்கும், இதுவரை வந்த ஞானிகளாலும்,  அகஸ்தியரையும்,  நந்தீசரையும் தவிர வேறு எந்த ஸித்தர்களாலும்  வெளிப்படுத்த இயலாத விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையேயான “விஸ்வரூப” காட்சியை எல்லா சீடர்களுக்கும் ஒரே நேரத்தில் காட்டி அருள்கிறார்.