அவதார புருஷர் ஸர்வஸ்ரீ கோன்குருநாதர் அவர்கள்

மெய்குரு:

ஸித்திமார்க்கத்தில் பிறப்பால் குருவானவரை “மெய்குரு” என்று அழைக்கப்படுகிறது. மெய்குருமார்கள் ஏற்கனவே நித்தியநிலையை அடைந்தவர்கள், பிறப்பை அறுத்தவர்கள், இறைவனோடு ஒன்றி இறைப்பணியை செய்து கொண்டிருப்பவர்கள். நித்தியநிலையை அடைய விரும்பும் மனித வித்துக்களுக்கு, அடிப்படைத்தத்துவங்களை போதிக்க இறைவனால் (பரமகுரு) இப்பூவுலகிற்கு வாழையடி வாழையாக அனுப்பப்படுபவர்கள். இவர்களின் வருகை பிறப்பு என்று அழைக்கப்படுவதில்லை “அவதாரம்” என்றே அழைக்கப்படுகிறது.

மெய்குருமார்கள் வேதங்களையும், சாஸ்திரங்களையும் உருவாக்கக் கூடியவர்கள். வேதங்களையும்,  சாஸ்திரங்களையும் தனக்கே உரித்தான தனிவழியில் போதிப்பவர்கள். இறைவனின் அடிப்படைத்தத்துவங்களை அந்தந்த காலத்திற்கேற்ப, கலாச்சாரத்திற்கேற்ப, நாகரீகத்திற்கேற்ப, மக்களின் மனநிலைக்கேற்ப, அறிவுநிலைக்கேற்ப, உயிர்நிலைக்கேற்ப மாற்றி அமைத்து போதிக்கும் வல்லமை உடையவர்கள்.

கோன்குரு:

இந்த மெஞ்ஞான சபையை உருவாக்கிய ஸர்வஸ்ரீ கோன்குருநாதர் அவர்கள் ஏற்கனவே எட்டு முறை மெய்குருவாக அவதரித்து ஒன்பதாவது முறையாக கோன்குருவாக அவதரித்துள்ளார்.

நித்தியம் பெற்று இறைவனுடன் ஒன்றுபட்டு மெய்குருவாக 8 முறை அவதாரம் எடுத்து, ஒவ்வொரு முறையும் தான் இப்பூவுலகில் அவதரித்த நோக்கத்தை உணர்ந்து, தனக்குக் கொடுத்த இறைப்பணியைச் சிறப்பாக நிறைவேற்றி, பல ஆத்மாக்களை நித்தியத்தில் ஆழ்த்தி, பல ஸித்தர்களையும், மெஞ்ஞானிகளையும், மெய்குருமார்களையும் உருவாக்கி, 9-வது முறை இப்பூவுலகில் அவதரித்தால் அவர் “கோன்குரு” என்று போற்றப்படுகிறார்.

‘கோன்’ என்றால் அரசன் என்று பொருள்படும். கோன்குருவானவர் உலகிலுள்ள மெய்குருமார்களுக்கெல்லாம் அரசராகத் திகழ்பவர். இந்த பூமியில் அவதாரம் எடுத்திருக்கும் மெய்குருமார்களையும், வேறு சில கிரஹங்களில் வாழும் ஆறாவது அறிவு பெற்ற, தகுதியுள்ள ஆத்மாக்களையும் வழி நடத்தி அருள்பாலிக்கக் கூடியவர்.

தற்சமயம் இவ்வுலகில் இறைவனை அடையும் தகுதியைப் பெறும் ஜீவாத்மாக்களுக்கு கோன்குருவின் மூலமாகத்தான் நித்தியம் அளிக்கப்படுகிறது. அவர் 1008 பேருக்கு நித்தியம் அளிக்கும் வல்லமை பெற்றவர். கோன்குருவாக அவதாரம் எடுத்த பிறகு, மறுமுறை இப்பூவுலகில் அவதாரம் எடுப்பதில்லை. கோன்குருவின் வருகையே இப்பூவுலகில் அவரது இறுதி வருகையாகும்.